மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசார் விசாரணையின்போது அடித்து கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ எஸ்.பி ரன்பீர் சிங், டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான அதிகாரிகள், சம்பவம் தொடர்பாக கடந்த 12-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
14-ம் தேதி முதல் விசாரணை தொடங்கிய நிலையில், சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று இரு குழுக்களாகப் பிரிந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஒரு குழுவினர் மடப்புரம் விளக்கு ஆர்ச் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியிலும், மற்றொரு குழுவினர் அஜித் குமாரின் தாய் மாலதி, உறவினர் ரம்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.
நகை திருடுபோனதாகப் புகார் அளித்த நிகிதாவிடம் இருந்து, அஜித் குமார் நகைகளைத் திருடி, தனது உறவினர் நிகிதாவிடம் கொடுத்ததாகத் தனிப்படை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.