திமிரி அருகே வனப்பகுதியில் முயலை வேட்டையாட வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்து, நரிக்குறவர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக, நரிக்குறவ இன பெண்கள் குளிப்பதைக் கூட பொருட்படுத்தாமல் வீட்டிற்குள் புகுந்து, சோதனை என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், 2 பேரை வனத்துறை அதிகாரிகள் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நரிக்குறவ இன மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், முயலை வேட்டையாடச் சொல்லி அவர்களே வற்புறுத்துவதாகவும், வேட்டையாடினால் கைது செய்து அபராதம் விதிப்பதாகவும் வனத்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் மீது பொய் வழக்குப் போட முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவ இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.