டிக்டாக், அறிமுகமான காலத்தில் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறந்த VINE app, திடீர் சறுக்கலால், கரடி தூக்கத்திற்குச் சென்றது. தற்போது AI தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவோடு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது, பயனர்களிடையே எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளது.
We’re bringing back Vine, but in AI form…. இதுதான் எலான் மஸ்க்கின் அதிரடியான புதிய அறிவிப்பு.
அமெரிக்காவின் Rus Yusupov, Dom Hofmann, Colin Kroll ஆகியோரால் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் இந்த VINE app. வெறும் 6 நொடிகள் கொண்ட காணொளிகளை மட்டுமே இதில் பதிவேற்ற முடியும் என்றாலும், குறுகிய காலத்தில் பல கோடி பயனர்களைப் பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானது. மூன்றே ஆண்டுகளில் 200 மில்லியன் பயனர்களைப் பெற்றது.
VINE அப்போதே பல பிரபலங்களை ஈர்த்து, பல வைரல் டிரெண்ட்-ஐ உருவாக முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக VINE தளத்தில் பூனை மற்றும் நாய்க் குட்டி வீடியோக்கள் மிகவும் பிரபலம் வாய்ந்தவை… இன்றளவும் யூடியூப்-ல் பலர் VINE வீடியோ தொகுப்பைப் பார்த்து ரசிக்க இதுவே காரணம்.
பல்வேறு காரணங்களால் VINE app-இன் வளர்ச்சி முடங்கிய நிலையில், 2016ம் ஆண்டு பயனர்கள் புதிய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று VINE அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. VINE ஆப்பை டிவிட்டர் வாங்கிய நிலையில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யமல் கிடப்பில் போட்டது.
இந்த நிலையில், 2022ம் ஆண்டு டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், இதை தற்போது ஏஐ உதவியுடன் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
நீண்ட யோசனைக்குப் பிறகு VINE appஐ கொண்டுவரத் தீர்மானித்த எலான் மஸ்க், கருத்துக் கணிப்பை நடத்த, பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆம் என்று பதிலளித்திருந்தது இணையத்தில் பேசு பொருளானது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் VINE app-ஐ புதுப்பொலிவுடன் கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க்.
ஏற்கனவே மக்கள் மத்தியில் மாஸ் காட்டிய VINE, மீண்டும் அறிமுகமாகும் பட்சத்தில் யூடியூப் ஷார்ட், இன்ஸ்டாகிராம் ரீல் போன்றவைகளுக்கு கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.