தாய்லாந்து, கம்போடியா இருநாடுகளுக்கும் இடையே 60 நாட்களுக்கு முன் தொடங்கிய போர் பதற்றம், கடந்த வியாழக் கிழமை எல்லைப் பகுதியில் இராணுவ மோதலாக வெடித்துள்ளது. வலிமையான படை பலம் கொண்ட தாய்லாந்தை, சிறிய படைகளுடன் கம்போடியா கடுமையாகப் போரிட்டு வருகிறது. இருநாடுகளின் இராணுவ வலிமை என்ன ? என்பது பற்றிய இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தாய்லாந்து-கம்போடியா பிரச்சனை தொடங்கியது இன்று நேற்றல்ல. ஒரு நூற்றாண்டு காலமாகவே இந்த பிரச்சனை இருந்து வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து கம்போடியா விடுதலை அடைந்தபோது, தாய்லாந்து உடனான எல்லை வகுக்கப்பட்டபோது பிரச்சனை தொடங்கியது.
இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவில் பதிவு செய்ய கம்போடியா முயற்சி செய்ததே பிரச்சனை தீவிரமடையக் காரணமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து, அவ்வப்போது நடந்த இராணுவ மோதல்களில் இருதரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உட்பட ஏராளமான பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வியாழக் கிழமை, எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ தளங்களை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியது.
அதன் பின்னர், ஏவுகணை லாஞ்சர்களை ஏந்திய கம்போடியா துருப்புக்கள் தாய்லாந்து எல்லையில் புகுந்தன. தாய்லாந்து இராணுவ வீரர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
கம்போடியா இராணுவம் தாக்குதலைத் தொடங்கியதால், தாய்லாந்து இராணுவமும் பதில் தாக்குதலில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து இராணுவ வீரர்கள், எல்லை அருகே இருக்கும் சிவன் கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது.
கம்போடியா மீது தாய்லாந்து F -16 ரக போர் விமானங்கள் மூலமும், பீரங்கிகளைப் பயன்படுத்தியும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாய்லாந்தின் ராணுவ வலிமை கம்போடியாவை விடக் குறைவு. இந்த ஆண்டுக்கான உலகளாவிய FIRE POWER பட்டியலில், தாய்லாந்து உலகில் 25 வது இடத்தில் உள்ளது.
ஆசிய நாடுகளில், இந்தோனேசியா மற்றும் வியட்நாமுக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் தாய்லாந்து உள்ளது. அதே நேரத்தில் FIRE POWER பட்டியலில், கம்போடியா 95 வது இடத்தில் உள்ளது.
தாய்லாந்து இராணுவத்தில் மொத்தம் 600,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளனர். 221,000 ரிசர்வ் வீரர்கள் மற்றும் 25,000 துணை ராணுவப் படைகள் உட்பட சுமார் 3,60,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் களத்தில் உள்ளனர்.
கம்போடியா இராணுவத்தில் மொத்தம் சுமார் 2, 31,000 வீரர்கள் உள்ளனர். இதில் சுமார் 10,000 வீரர்கள் மட்டுமே மட்டுமே துணை ராணுவப் பணிகளில் உள்ளனர். இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்காக 5.89 பில்லியன் டாலர் நிதியைத் தாய்லாந்து ஒதுக்கி உள்ளது. அதேநேரம் கம்போடியா 860 மில்லியன் டாலர் நிதியைப் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கி உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புக்காக அதிகம் செலவழிக்கிறது கம்போடியா. தாய்லாந்துடன் ஒப்பிடும் போது இது 10 மடங்கு அதிகம் என்று கூறப் படுகிறது. 635 அதிநவீன போர் பீரங்கிகள் தாய்லாந்திடம் உள்ளது. இதில் M60A3 Patton மற்றும் உக்ரைனின் T-84 Oplot முக்கியமானவை ஆகும்.
Armored Personnel Carrier முதல் Infantry Fighting Vehicle வரை சுமார் 16,900க்கும் மேற்பட்ட கவச சண்டை வாகனங்கள் உள்ளன. கம்போடியா, T-55 மற்றும் T-59 ரக பீரங்கிகள் உட்பட சுமார் 644 பீரங்கிகளை வைத்துள்ளது. மேலும், 3,627 Armored Personnel Carrier கவச வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
கம்போடியாவிடம் BM-21 Grad, RM-70 உட்பட 463 பல்துறை ஏவுகணை ராக்கெட் அமைப்புகள் உள்ளன. கூடுதலாக 20 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக் கூடிய சோவியத் மற்றும் செக் குடியரசின் 122 மில்லிமீட்டர் ராக்கெட்டு ஆயுதங்களும் கம்போடியாவிடம் உள்ளன.
தாய்லாந்திடம் 26 பல்துறை ஏவுகணை ராக்கெட் அமைப்புக்கள் உள்ளன. 50 self-propelled ஹோவிட்சர்கள் மற்றும் 589 towed howitzers தாய்லாந்திடம் உள்ளன. கம்போடியா 30 self-propelled ஹோவிட்சர்கள் மற்றும் 430 towed howitzersகளை வைத்துள்ளது.
72 அதிநவீன போர் விமானங்களுடன் மொத்தம் 493 போர் விமானங்கள் தாய்லாந்திடம் உள்ளன. 28 அமெரிக்க F-16 ரக போர் விமானங்கள் மற்றும் சுவீடனின் Saab JAS 39 Gripens போர் விமானங்கள் முக்கியமானவை.
கடற்படைக்கான 20 பிரத்யேக போர் விமானங்கள், 54 இராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஏழு AH-1 Cobra ஹெலிகாப்டர்கள், தனியாக 258 ஹெலிகாப்டர்கள் எனத் தாய்லாந்து விமானப்படை மிகப் பலமாக உள்ளது. தாய்லாந்தில் 46,000 பேர் விமானப்படையில் பணிபுரிகின்றனர்.
கம்போடியாவிடம் கிட்டத்தட்ட விமானப்படையே இல்லை என்று கூறிவிடலாம். சில பழைய சோவியத் கால ஹெலிகாப்டர்கள் உட்பட மொத்தம் 25 விமானங்களை மட்டுமே கம்போடியா விமானப்படை வைத்துள்ளது. 1500 பேர் மட்டுமே கம்போடியா விமானப்படையில் பணிபுரிகின்றனர். கம்போடியா வசம் எந்த ஒரு போர் விமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தின் கடற்படையில் 70,000 வீரர்கள் உள்ளனர். ஒரு ஹெலிகாப்டர் தாங்கி கப்பல், ஏழு போர்க்கப்பல்கள், ஆறு corvettes, ஐந்து சுரங்கப் போர் கப்பல்கள் மற்றும் 49 ரோந்து கப்பல்கள் தாய்லாந்திடம் உள்ளன. மேலும், தனது முதல் சீன S26T நீர்மூழ்கிக் கப்பலை வாங்கவும் தயாராகி வருகிறது.
சுமார் 20 ரோந்துப் படகுகள் மட்டுமே கம்போடியா கடற்படையில் உள்ளன. அதுவும் நதிக்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர கண்காணிப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். கம்போடிய கடற்படையில் 2800 ஊழியர்கள் உள்ளனர். போர்க்கப்பல்கள், corvettes, நீர்மூழ்கிக் கப்பல்கள் என எந்தவொரு கடற்படை போர் வலிமையும் கம்போடியாவுக்கு இல்லை.
ராணுவத்துக்கான நிதி, அதிநவீன இராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் என அனைத்தும் தாய்லாந்திடம் குவிந்து கிடக்கின்றன. அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருப்பது தாய்லாந்துக்கு மேலும் வலிமை.
தாய்லாந்து, கம்போடியா ஆகிய இரு நாடுகளில், தாய்லாந்து இராணுவ வலிமை மிக்க நாடாக விளங்குகிறது. அதே நேரத்தில் துல்லிய தாக்குதலில் கம்போடிய படைகள் தீரத்துடன் போரிட்டு வருகின்றன.