சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு கும்மிடிப்பூண்டி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக கடந்த 12ம் தேதி நடந்து சென்ற 10 வயது சிறுமி மர்ம நபரால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் 12 நாட்களுக்கும் மேலாக போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழகம் – ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து வீடியோ பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர்தான் குற்றவாளி என சிறுமி கூறியதாக தகவல் வெளியானது. விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்த 28 வயதான ராஜூ பிஸ்வகர்மா என்பதும் சூலூர்பேட்டை அருகே உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து கவரப்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து ராஜூவிடம் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள மருத்துவமனைக்கு ராஜூ அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனிடையே சூலூர்பேட்டை அடுத்துள்ள குப்பாரெட்டிபாளையம் பகுதியில் ராஜூ வேலை செய்த தாபாவிற்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தாபாவின் பின்புறம் மறைத்து வைத்திருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.