திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜைகள் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமலை கரடு என்ற மலைப்பகுதியில் இரும்பு தாதுக்கள் நிறைந்த மணல் மற்றும் கற்கள் காணப்படுகிறது. இங்கு கடந்த 2018ம் ஆண்டு இரும்பு தாது எடுக்கும் திட்டம் நடைபெற்ற போது மக்கள் அதை எதிர்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே இப்பகுதியில் புதையல் இருப்பதாகவும், மர்ம குறியீடுகள் குறிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இரவு நேரத்தில் ஜேசிபி வாகனத்துடன் வந்த 4 பேர் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோழியை பலியிட்டும், குழிகள் தோண்டியும் மர்ம பூஜையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் வருவதை அறிந்த அந்த நபர்கள் வனப்பகுதியை விட்டு தப்பி ஓடினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குமரேசன், வீரக்குமார், குமரவேல் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த இந்த பூஜையால் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.