ஓலைச்சுவடிகளில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் நமது அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மான் கி பாத் நிகழ்ச்சியின் 124வது அத்தியாயத்தில் பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டு மக்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகளை பற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். சமீபத்தில் விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பாதுகாப்பாக பூமி திரும்பிய போது முழு தேசமும் மகிழ்ச்சியாலும், பெருமையாலும் நிறைந்தது என்றும், ஆகஸ்ட் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தேசிய விண்வெளி தினம் குறித்த யோசனைகளை நமோ செயலில் தமக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.
யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள மஹாராஷ்டிராவில் 12 கோட்டைகள் நமது சுயமரியாதையை வெளிப்படுத்துகின்றன என்றும், இந்த கோட்டைகளை மக்கள் பார்வையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தஞ்சாவூரை சேர்ந்த மணிமாறன் தமிழ் ஓலைச்சுவடிகளை படித்து புரிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்து வருகிறார் என்றும், இதனால் பல மாணவர்கள் ஓலைச்சுவடி கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும், பண்டைய காலத்து பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேசிய டிஜிட்டல் களஞ்சியம் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.