விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் தெருவில் வைத்து கொண்டாடும் வரை பல்வேறு வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் கோலகலமாக கொண்டாடி மகிழும் பண்டிகை தான் விநாயகர் சதூர்த்தி. அத்தகைய விழாவுக்காக விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி பெரும்பங்கு வகிக்கிறது.
இங்கு வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பு உண்டு என்பதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் ஒசூருக்கு வருகை புரிந்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் ஒசூரில் முகாமிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
சுமார் இரண்டாயிரத்து 500 வடமாநிலத் தொழிலாளர்கள் 250க்கும் அதிகமான இடங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலையில் தொடங்கி தெருக்களில் வைத்து வணங்கும் பிரம்மாண்ட சிலைகள் வரை பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாராகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அறிவுறுத்தலை பின்பற்றி தற்போது களிமண், கிழங்குமாவு, காகிதக் கூழ் ஆகியவற்றை வைத்து விநாயகர் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
விநாயகர் சதூர்த்தி பண்டிகைக்கு இன்னமும் ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே சிலை வாங்குவதற்கான முன்பதிவு குவிந்து வருகிறது. ஒசூர் பகுதியில் குறைந்த விலையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் தயாரிக்கப்படும் விநாயகர் சிலை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.