இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது தாய்லாந்தும், கம்போடியாவும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக முந்திக்கொண்டு அறிவித்துள்ளார். காரணம் என்ன விரிவாக பார்க்கலாம்..
தாய்லாந்து – கம்போடியா இடையே தீராத எல்லைப் பிரச்சனை, ராணுவ மோதலாக உருவெடுத்துள்ளது. கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து தாய்லாந்து போர் விமானங்கள், ஏவுகணைகளை வீச, பீரங்கிகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது கம்போடியா…
இருநாடுகளுக்கும் இடையே 4வது நாளாக யுத்தம் நீடித்து வரும் நிலையில், 33 பேர் உயிரிழந்ததாகவும், 1 லட்சத்து 68 ஆயிரம் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1953 வரை பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த கம்போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் இடையே எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில், 1907-ல் உருவாக்கப்பட்ட அந்த வரைபடம் தான இடியாப்ப சிக்கல்களுக்கு மூலக்காரணமாக பார்க்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய எல்லையில், உள்ள புராதன கோயிலுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வரும் நிலையில்,சர்வதேச நீதிமன்றம் கம்போடியாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதனை தாய்லாந்து ஏற்காததால், பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலை நிறுத்த கம்போடியா – தாய்லாந்து எல்லைப் பிரச்னை ஒரு முழு வீச்சு போராக உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
யுத்தம், அமெரிக்காவின் சாத்தியமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இருநாடுகளையும் எச்சரித்ததாகவும், இருநாடுகளும் உடனடியாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் வழக்கம் போல் அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்….
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதல், தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள டிரம்ப், எந்த நாடுகளுக்கு இடையே போர் நடந்தாலும், நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தை நிறுத்தியதாக அடிக்கடி கூறி வரும் டிரம்ப், தற்போது கம்போடியா – தாய்லாந்து போரை கையில் எடுத்திருக்கிறார் என்கிறது சர்வதேச சமூகம்…