புதுச்சேரியில் பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்தில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், 263 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுவரை அரசு சார்பில் எந்த நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நிரந்தர ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பணிமனைகளில் பேருந்துகளை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ள போக்குவரத்து ஊழியர்கள், பணி நிரந்தரம் செய்யும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.