பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தை அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் முன்பு நில உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே அணிகடுவு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு அதே பகுதியில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலம் தொடர்பாக இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் தனது நிலத்தை அளவீடு செய்யுமாறு வருவாய்த்துறையினரிடம் மோகன்ராஜ் மனு அளித்திருந்தார்.
அதன்படி, வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு செய்ய வந்தபோது மோகன்ராஜுக்கும் அவரது உறவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்த உறவினர், மோகன்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாக்குதலில் காயமடைந்த மோகன்ராஜ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.