பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் நள்ளிரவு வரை விவாதம் அனல் பறந்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூா் தொடா்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய ஜெய்சங்கர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை எனத் தெரிவித்தார். ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் தயாராக உள்ளதாக மற்ற நாடுகளிலிருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்ததாகக் கூறிய அவர், ராணுவ நடவடிக்கைக்கான தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை என்றும், வணிக ரீதியான எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.
ஆப்ரேஷன் சிந்தூருடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நின்றுவிடாது என்று எச்சரித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டு மக்களைக் காக்கப் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சியினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் வேறு சில நாடுகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியினர் அந்நியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிவதாகக் கூறிய அவர், அதனால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாகச் சாடினார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளுக்கும் அவர்கள் அங்கேயே அமர்ந்திருப்பார்கள் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் மக்களவையில் விளக்கமளித்தார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.