கிருஷ்ணகிரியில் சகோதரர் மகன்களை இரும்பு ராடால் அடித்துக்கொன்ற சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள ஆனெக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் ஷான் பாஷா. கட்டட வேலை செய்து வரும் இவருக்கு ரிஹானா என்ற மனைவியும், முகமது இஷாக், முகமது ஜுனைத் மற்றும் முகமது ரோஹன் ஆகிய 3 மகன்களும் இருந்துள்ளனர்.
ஷான் பாஷாவின் தம்பியான காசிம் மற்றும் அவர்களது தாயாரும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று ஷான் பாஷா வேலைக்குச் சென்றுவிட, மனைவி ரிஹானா மற்றும் தாயார் அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த காசிம் அங்கிருந்த இரும்பு ராடால், தனது அண்ணன் மகன்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகமது இஷாக் மற்றும் முகமது ஜுனைத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயங்களுடன் வலியில் துடித்துக்கொண்டிருந்த முகமது ரோஹனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஹெப்பகோடி போலீசார், உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஷான் பாஷாவின் தம்பி காசிமை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.