நெல்லை அருகே இருதரப்பினர் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
நெல்லை மாவட்டம், பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த சிறுவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார்.
அப்போது, ஆத்திரத்திலிருந்த 17 வயது சிறுவன் காவல் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர், தற்காப்புக்காகச் சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், வயிற்றில் குண்டுபாய்ந்த சிறுவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாப்பாகுடியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவலர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி வீடு புகுந்து தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.