சென்னை அண்ணாநகரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான சுரேஷ், நித்தின் சாய் ஆகியோர் அண்ணா நகரில் உள்ள உணவகத்தில் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.
திருமங்கலம் அருகே சென்றபோது பின்னால் வந்த சொகுசு கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சுரேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லயோலா கல்லூரி மாணவர்களுக்கும், தனது நண்பர்களுக்கும் பிரச்சனை இருந்ததாகவும், லயோலா கல்லூரி மாணவர்கள் தங்களைக் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்திருந்ததாகவும் கூறினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.