தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்காக, மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சியில் கடந்த 2022, 2023ம் ஆண்டுகளில் வரி வசூல் முறைகேட்டால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டும், 19 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரிவசூல் மோசடியைக் கண்டித்து, மதுரை மாநகராட்சியின் 41-ஆவது மாமன்ற கூட்டத்துக்குக் கருப்பு உடை அணிந்து அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
அப்போது மேயர் இந்திராணி பொன்வசந்த் பதவி விலக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அவர்கள் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இதனை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர், தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை 40-வது இடம்பிடித்தது குறித்த எம்.பி சு.வெங்கடேசனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.