இமயமலையில் சீன எல்லைக்கு அருகில் ‘திவ்ய த்ரிஷ்டி’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு Ingenious Research Solutions (இன்ஜினியஸ் ரிசர்ச் சொல்யூஷன்ஸ்) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், பெங்களூரில் டிஆர்டிஓ ஆய்வகமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் மையத்தின் (CAIR) ஆதரவுடன் ‘திவ்ய த்ரிஷ்டி ‘ என்ற AI கருவியை உருவாக்கியுள்ளது.
‘திவ்ய த்ரிஷ்டி’ என்பது முக அங்கீகாரத்தை நடை மற்றும் எலும்புக்கூடு போன்ற மாறாத உடலியல் அளவுருக்களுடன் இணைத்து , வலுவான பயோமெட்ரிக் அங்கீகார அமைப்பை உருவாக்கும் ஒரு AI கருவியாகும். முக அங்கீகாரத்தை நடை பகுப்பாய்வோடு ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தக் கருவி இரட்டை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. அடையாள மோசடிக்கான வாய்ப்பைக் குறைக்கும் இந்த AI கருவி மூலம் மிகவும் துல்லியமான அடையாளத்தை உறுதி செய்ய முடிகிறது.
ஆபரேஷன் சிந்தூரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகளுடன் கண்காணிப்பு மற்றும் தாக்குதல்களுக்காகத் தற்கொலை காமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தப் பட்டது. குறிவைக்கப் பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத தளங்களில் இணை சேதம் எதுவும் இல்லாமல் துல்லியமான தாக்குதல்களைச் செய்வதற்கு ஸ்கைஸ்ட்ரைக்கர் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்தியாவில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது 600க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்திய போதும் அவற்றில் ஒன்று கூட இந்திய வான் எல்லையைக் கூட தொடவில்லை. ஆகாஷ்தீர் போன்ற இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள்,பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் நடுவானிலேயே, இடைமறித்துச் சுட்டு வீழ்த்தின. ட்ரோன் போருக்கான அணுகுமுறையில் ஒரு நவீன தந்திரத்தை ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா நடத்திக் காட்டியது.
உளவுத்துறை ட்ரோன்கள், வெடிமருந்து சுமந்து அலைந்து திரியும் ட்ரோன்கள் , அதிவேக டிகோய் ட்ரோன்கள் மற்றும் SCALP மற்றும் HAMMER போன்ற துல்லியமான ஏவுகணைகளை எல்லாம் இந்திய முப்படை ஒன்றிணைத்துப் பயணப்படுத்தின. ஸ்கைஸ்ட்ரைக்கர், ஹரோப் மற்றும் நாகாஸ்ட்ரா‑1 போன்ற உள்நாட்டு அமைப்புகளும் முக்கிய பங்கு வகித்தன.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை முழுவதும் நிகழ் நேரச் செயல்பாட்டுக் கட்டளைக்காக, வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த விமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடன் ஒன்று சேர பயன்படுத்தப் பட்டன. இந்நிலையில், கிழக்கு சிக்கிமில் உள்ள இந்தியச் சீன எல்லைப் பகுதியில், இமயமலைக்கு மேலே உயரமான இடத்தில், ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை நடத்தப் பட்டது.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உருவான தன்னம்பிக்கை இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இராணுவம் இந்தப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சென்சார்கள், ட்ரோன்கள் மற்றும் அதிவேக தரவு அமைப்புகளை இந்தியா இராணுவம் சோதனை செய்தது.
இந்தியாவின் திரிசக்தி படையைச் சேர்ந்த இராணுவத் துருப்புக்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி நடத்திய விரைவான ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுப்பது மிக முக்கியமான உண்மையான போர்க்கள ஒத்திகையை எப்படிச் செய்தன என்பதைப் பாதுகாப்புத் துறையின் செய்திப்பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நிகழ் நேரத்தில் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, மதிப்பிடுவதற்கும், பதிலளிப்பதற்கும் இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். களப் பிரிவுகள் மற்றும் கட்டளை மையங்களுக்கு இடையே தடையற்ற தரவுப் பகிர்வை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட சென்சார்கள் இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.
இது இந்திய இராணுவத்தின் “sensor-to-shooter” பயிற்சி ஆகும். இதன் பொருள் ஒரு சென்சார் மூலம் அச்சுறுத்தல் கண்டறியப்பட்டவுடன், தரவு உடனடியாக முடிவெடுப்பவர்களுக்கு அனுப்புவதும் விரைவாக முடிவெடுப்பதும் வெற்றிகரமாகப் பயிற்சியாகும். இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூர் மதிப்பாய்வு செய்த இந்தப் பயிற்சியில், எதிர்கால தொழில்நுட்பங்கள், கோட்பாடுகள் மற்றும் போர் வியூகத் தந்திரங்கள் ஆகியவை சோதித்துப் பார்க்கப் பட்டன.
எந்தவொரு எதிரிக்கும் எந்தவொரு நிலப்பரப்புக்கும் இந்திய இராணுவம் தயாராக இருப்பதை இந்த பயிற்சி உறுதிப் படுத்தியுள்ளது என்று திரிசக்தி படையின் பொது அதிகாரி கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஜூபின் ஏ மின்வல்லா தெரிவித்துள்ளார்.