ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளான சுலைமான் ஷா உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். ஆப்ரேஷன் மகாதேவ் எப்படி திட்டமிடப்பட்டது? வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேசத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு லக்ஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான TRS அமைப்பு பொறுப்பேற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று லக்ஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என்பதை NIA உறுதிப்படுத்தியது. பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர தேடுதல் வேட்டையும் விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் சுலைமான் ஷா என்ற ஹாசிம் மூசா என்ற பயங்கரவாதியைப் பிடித்தால் 20 லட்சம் ரூபாய் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான கொடூரமான பயங்கரவாதிகளைப் பிடிக்கவே ஆப்ரேஷன் மகாதேவ் என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நிலையில், மகாதேவ் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் டச்சிகாம் தேசிய பூங்கா அருகில் உள்ள ஹர்வான் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
ஜூலை மாதத் தொடக்கத்திலேயே பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை மத்திய பாதுகாப்புப் படையினர் பெற்றுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சீன ரேடியோ அமைப்பின் மூலமே ரகசியத் தகவல்களைப் பரிமாறி வந்துள்ளனர்.
சீனாவின் அல்ட்ரா ரேடியா தொலைத்தொடர்பு அமைப்பின் இயக்கத்தைக் கண்டறிந்த பிறகே இந்த ஆப்ரேஷன் மகாதேவ் தொடங்கியது. ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை மேற்கொள்ளும் முன் பாதுகாப்புப் படையினர், பஹல்காம் பயங்கரவாதிகளை 14 நாட்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். மத்திய உளவுத்துறையின் தகவல்களைக் கொண்டே பாதுகாப்புப் படையினர் செயல்பட்டுள்ளனர்.
பல நாட்களாகக் கண்காணித்து, மிகவும் கவனமாக நடத்தப்பட்ட ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையில், இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புக் குழுவினர் முல்னார் பகுதியைச் சுற்றிவளைத்து, அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த திங்கட் கிழமை, இந்திய ராணுவம் தனது சினார் கார்ப்ஸ் எக்ஸ் பக்கத்தில் ஆபரேஷன் மஹாதேவ். லிட்வாஸின் பொது பகுதியில் தொடர்ந்து வருகிறது என்று முதலில் பதிவிட்டது.
அடுத்த பதிவில், தீவிர சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும், ஆப்ரேஷன் இன்னும் தொடர்கிறது என்றும் பதிவிட்டது.
ஜபர்வான், மகாதேவ் சிகரங்களுக்கு இடையே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டையில் சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்சா ஆஃப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
பயங்கரவாதிகளிடம் இருந்து Carbine ரகத் துப்பாக்கிகள், ஏகே-47 துப்பாக்கிகள், 17 ரைபிள் கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலுக்குத் தயாராக இருந்ததைக் காட்டுகின்றன. மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களும் இருந்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற SSG படைப்பிரிவின் முன்னாள் கமாண்டோவான சுலைமான் ஷா, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, கடந்த
2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவி தெற்கு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளான்.
சுமார் 6 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஹாஷிம் மூசா இருந்துள்ளான் என்று இந்திய பாதுகாப்புப் படையினர் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹாசிம் மூசா தலைமையிலான பயங்கரவாத குழு, ஜம்மு காஷ்மீரில் உள்ள காண்டர்பாலில் 7 பொதுமக்களையும் பாரமுல்லாவில் 4 பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபரில் Z-Morh சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலில் சுலைமான் ஷா ஜிப்ரான், ஹம்சா ஆப்கானி ஆகிய பயங்கரவாதிகள் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலில் தனது மூத்த சகோதரனை இழந்த விகாஸ் கும்ராவத், பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட செய்தி, தங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்ததாகக் கூறியதோடு, ஆப்ரேஷன் மகாதேவ் மத்திய அரசு மற்றும் இந்திய இராணுவத்தின் சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல்,பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியக் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால், பாதுகாப்புப் படையினரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.மேலும், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாதிகளை வேட்டையாடியது எளிதான காரியமல்ல என்றும் அதற்காக, அவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் பர்வேஸ் அகமது ஜோதர்,பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் NIA அதிகாரிகளால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷ்ரவண மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில், சிவபெருமானுக்காக விரதம் இருப்பது, வழிபாடு செய்வது, தீர்த்தமாடுவது காஷ்மீர் இந்துக்களின் பாரம்பரியமாகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக் கணக்கான காஷ்மீர் இந்துக்கள், மகாதேவ் மலைக்குச் செல்வது வழக்கம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் காரணமாக மகாதேவ் மலை யாத்திரை பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் zero tolerance against terrorism என்ற கொள்கையின் படி, காஷ்மீர் இந்துக்களுக்குப் புனிதமாக விளங்கும் ஷ்ரவண மாதத்திலேயே ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.