போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்ற இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகள் யார் யார்? என உச்சநீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தர லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பிருப்பதால் தமிழ்நாடு காவல்துறை வழக்கை முறையாக விசாரிக்காமல் இழுத்தடிப்பதாகவும் வாதிடப்பட்டது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், பிரதானமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கிலிருந்தால் வழக்கு விசாரணை எப்போது முடிவடையும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லஞ்சம் கொடுத்த ஏழைகளையும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் ஆயுட்காலம் முழுவதும் வழக்கு முடிவுக்கு வராது என அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தவிர லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியாற்றிய இடைத்தரகர்கள், அதிகாரிகள் யார் யார் என்பதை தாங்கள் அறிய விரும்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அது தொடர்பாகத் தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஒட்டுமொத்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சிறு குறிப்பை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.