நெல்லையில் மென்பொருள் ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு விசாரணை அதிகாரி தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த ஆறுமங்கலத்தை சேர்ந்த கவின் என்ற ஐடி நிறுவன ஊழியர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேற்கு மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார், இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது விசாரணையை தொடங்கிய அவர், கொலை செய்யப்பட்ட கவினின் சகோதர் பிரவீனிடம் முதலில் விசாரணை மேற்கொண்டார். மேலும், கவினின் செல்போனில் உள்ள தகவல்களை கைப்பற்றியும் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், உயிரிழந்த கவின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க சென்ற அதிகாரிகளிடம், தங்களுக்கு நிதி வேண்டாம் எனக்கூறி அதனை வாங்க கவினின் தந்தை மறுப்பு தெரிவித்தார்.
அப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அதனை வாங்க மறுத்த பெற்றோர், தங்கள் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.