வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி பெருமழையை தொடர்ந்து, வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
குடியிருப்புகள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை அத்தனையும் தரைமட்டமானதோடு, கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் மண்ணோடு மண்ணாகக் புதைந்தனர்.
இந்த பேரழிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் பலரைக் காணவில்லை எனவும் கேரள அரசு அறிவித்திருந்தது. உறவுகளையும், உடமைகளையும் கண்முன்னே பறிகொடுத்து உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானவர்களின் அழுகுரல் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
வயநாடு மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவாகி உள்ள இந்த இயற்கை பேரிடர் நிகழ்ந்து, ஓராண்டை எட்டியிருக்கிறது.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான தேவை என்ன என்பதை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாமல் இன்றளவும் அம்மாநில அரசு திணறி வருவதாக கூறப்படுகிறது.