அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினரின் பேரன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் திருமங்கலம் எஸ்பிஓஏ பள்ளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், மாணவர் நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொரு மாணவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மகன் விபத்தால் உயிரிழக்கவில்லை, கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திமுக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரின் பேரன் சந்துருவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து, மாணவர் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவர் நித்தின் சாய் மீது காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து சந்துரு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.