கவின் கொலை வழக்கில் சுர்ஜித் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப்போவதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞம், மென்பொறியாளருமான கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27ஆம் தேதி நெல்லை கே.டி.நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சசோதரியை காதலித்தால் கவினை வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சுர்ஜித் மற்றும் அவரது காவல் உதவி ஆய்வாளர்களான பெற்றோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உதவி ஆய்வாளர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் எனக்கூறி இளைஞரின் சொந்த ஊரில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கவினின் சசோதரனை நேரில் வரவழைத்து காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக கவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்று கொள்வோம் என்றும், இல்லையென்றால் வழக்கை வேறு முகமைக்கு மாற்ற கோரிக்கை விடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.