ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்காவில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பத்தால் 13 அடி உயரம் வரையிலான பேரலைகள் உருவாகி, சுனாமி தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலின் கரையோர நாடுகள் பலவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள நெருப்பு வளையம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..
ஒரு போர்த்துகீசிய மாலுமி மற்றும் ஆய்வாளரான ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), ஸ்பெயினின் அரசவைக்காக பணியாற்றினார். 1519ம் ஆண்டில் பூமியைச் சுற்றிவர முதல் கடற்பயணத்தை ஸ்பெயினிலிருந்து தொடங்கினார். ஐந்து கப்பல்கள் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்ற ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), வழியில் பிலிப்பைன்ஸில் உள்ள மக்டான் தீவில், உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட சண்டையில் கொல்லப்பட்டார்.
மாகெல்லனின் பயணம் முழுமையாக நிறைவடையவில்லை. ஆனாலும் அவரது கப்பல்களில் ஒன்றுமட்டும் ஸ்பெயினுக்குத் திரும்பி, பூமியைச் சுற்றிய உலகின் முதல் பயணத்தை நிறைவு செய்தது. பசிபிக் பெருங்கடலைக் கடந்த முதல் ஐரோப்பியரான ஃபெர்டினாண்ட் மாகெல்லன் (Ferdinand Magellan), பெருங்கடலில் நீரின் அமைதியைக் கண்டார். அதனால்தான் இன்று வரை,பசிபிக் பெருங்கடல் என்று அழைக்கப் படுகிறது. பசிபிக் என்றால் அமைதியானது என்று பொருள்படும்.
இந்த பசிபிக் பெருங்கடலைச் சுற்றிலும் ஆபத்தான எரிமலைகள் உள்ளன என்பதை ஃபெர்டினாண்ட் மாகெல்லனுக்குத் தெரிந்திருக்கவில்லை. நெருப்பு வளையம் என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஒரு எரிமலைச் சங்கிலியாகும். நெருப்பு வளையம் ஒரு சரியான வட்டம் அல்ல, குதிரைலாடம் போன்ற வடிவத்தைக் கொண்டது.
இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ், மலேசியா, ஜப்பான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,சிலி,பெரு, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை,ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் உள்ளிட்ட 15 நாடுகள் இந்த நெருப்பு வளையத்துக்குள் உள்ளன.
இதில், தென்அமெரிக்காவின் தெற்கு முனையிலிருந்து வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரை வரை,(Bering Sea) பேரிங் கடல் வழியாக தெற்கே நியூசிலாந்து வரையிலும், 452 எரிமலைகள் ஒரு நெருப்புச் சங்கிலி போல நீண்டுள்ளது.
40,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நெருப்பு வளையம், ஜப்பான், இந்தோனேசியா, சிலி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கியதாகும். உலகின் பூகம்பங்களில் தோராயமாக 90 சதவீதம் நெருப்பு வளையத்தைச் சுற்றி நிகழ்கின்றன.
உலகில் கடல் மட்டத்துக்கு மேலே உள்ள எரிமலைகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளன. நெருப்பு வளையம் என்பது தட்டு டெக்டோனிக்ஸ் விளைவு எனப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் தரை, ஒரு கடல் தகடான பசிபிக் தட்டு, வட அமெரிக்க தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, பிலிப்பைன்ஸ் தட்டு, ஆஸ்திரேலிய-இந்திய தட்டு மற்றும் யூரேசிய தட்டு உள்ளிட்ட தகடுகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த தகடுகளின் இயக்கம் அழிவுகரமான தட்டு விளிம்புகளில் துணை மண்டலங்களை உருவாக்குகிறது, இது எரிமலைகள் உருவாகவும் பூகம்பங்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது. 1883-ல் Krakatoa கிரகடோவா தீவில் ஏற்பட்ட பூகம்பம், 1906-ல் சான் பிரான்சிஸ்கோபூகம்பம், 1960-ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பம்,1964-ல் அலாஸ்கா பூகம்பம், 2004-ல் வடக்கு சுமத்ரா பூகம்பம், ஜப்பானில் சுனாமி, 2011-ல் ஜப்பானின் Fukushima ஃபுகுஷிமா அணுசக்தி பேரழிவு, 2016-ல் ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட பூகம்பம் போன்றவை வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளாகும். 8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பெரும்பாலான பூகம்பங்கள் நெருப்பு வளையத்துக்குள் மட்டுமே உள்ளன.
நெருப்பு வளையத்தில் பூகம்பங்களை முன்கூட்டியே விஞ்ஞானிகளால் கணிக்க முடியாதா ? என்ற கேள்விக்கு பெரும்பாலான புவியியல் வல்லுநர்கள் நிலநடுக்கங்களைக் கணிப்பது சாத்தியமில்லை என்றே கூறுகிறார்கள். பூகம்பங்கள் எப்போது, எங்கு ஏற்படும் என்பதை எந்த துல்லியத்துடன் கணிப்பது இன்னமும் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், உலகெங்கிலும் உள்ள மிகவும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு கருவிகளின் நெட்வொர்க், பூகம்பங்கள் மற்றும் சுனாமி பற்றிய தகவல்களை சில நொடிகளில் வழங்குகின்றன.
இதில் கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில், தகவல்களை அளிக்கும் விஞ்ஞானிகளின் திறனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும்,நெருப்பு வளையத்துக்குள் இருக்கும் நாடுகளின் புவியியல் ஆய்வாளர்கள்,ஒன்றிணைத்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லா நாடுகளும் கடல் மற்றும் நில அடிப்படையிலான முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.