கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதால் மூதாட்டி உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி உறவினர்கள் உடலை வாங்க மறுக்கும் நிலையில், மூதாட்டியின் மருமகளிடம் செல்போன் மூலம் பங்குத் தந்தை சமரசம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்த சாதிக் ஜெட்லி என்ற இளைஞரை, கருங்கல் போலீசார் சைபர் கிரைம் வழக்கில் கைது செய்யச் சென்றனர்.
வீட்டிற்குச் சென்ற போலீசாரை இளைஞரின் பாட்டியான சூசை மரியாள் தடுக்க முயன்றுள்ளார். அப்போது போலீசார் தள்ளிவிட்டுத் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து மூதாட்டியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மூதாட்டியின் உறவினர்கள் இதில் சம்மந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், நீதிபதி தலைமையில் உடற்கூறாய்வு நடத்த உத்தரவிடவும் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், மாத்திரவிளை வட்டார பங்குத் தந்தை செல்போனில் மூதாட்டியின் மருமகளான சந்திரகலாவைத் தொடர்புகொண்டு, காவல்துறைக்காகச் சமரசம் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.