சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இந்தியத் தொழிலாளர்கள் 7 பேர் செய்த செயல் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தனியார் அமைப்பு லட்சக்கணக்கில் பரிசு அறிவித்துள்ள நிலையில், அந்த தொழிலாளர்களுக்குச் சிங்கப்பூர் அதிபரும் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த 7 தொழிலாளர்கள் யார், அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சிங்கப்பூரின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தஞ்சோங் காத்தோங். அங்கு
அந்நாட்டின் தேசிய குடிநீர் ஆணையம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளில் இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
இந்நிலையில், கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள சாலையில், கடந்த 26ஆம் தேதி பெண் ஒருவர் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் அந்த சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருந்தது. வேகமாக வந்துகொண்டிருந்த அந்த பெண், கட்டுப்பாட்டை இழந்து அந்த பள்ளத்தில் காருடன் மூழ்கினார்.
அருகே வேலை செய்துகொண்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள் இதனைக் கவனித்தனர். உடனே சற்றும் தாமதிக்காமல், தமிழகத்தை சேர்ந்த பிச்சை உடையப்பன் சுப்பையா என்பவர் அந்த பெண்ணை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார். சக தொழிலாளர்களையும் அழைத்த அவர், நைலான் கயிற்றை அந்த பள்ளத்திற்குள் போடும்படி கூறினார்.
நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணும், காரின் கதவை ஒருவழியாகத் திறந்து அந்த கயிற்றை பற்றிக்கொண்டார். பின்னர் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரிதமாகச் செயல்பட்டு அந்த பெண்ணை காப்பாற்றியவர்களின் பெயர் பிச்சை உடையப்பன் சுப்பையா, வேல்முருகன், சரவணன், வீரசேகர், அஜித்குமார், சந்திரசேகரன், ராஜேந்திரன் என்பது பின்னர் தெரிய வந்தது.
பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய இவர்கள் 7 பேருக்கும், பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டிய நிலையில், தனியார் அறக்கட்டளை ஒன்று அந்த 7 பேருக்கும் 47 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்தினத்தையும் சென்றடைந்தது. 7 தொழிலாளர்களையும் மிகவும் பாராட்டிய அவர், அவர்கள் அனைவரும் விரைவாகவும் தைரியமாகவும் செயல்பட்டதாகக் கூறினார். மேலும், அவர்களை நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 7 தொழிலாளர்களும் ஆகஸ்ட் 3ம் தேதி அதிபர் மாளிகைக்கு நேரில் சென்று அதிபரைச் சந்திக்க உள்ளனர். பாராட்டுகளையும், பணத்தையும் காட்டிலும், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம் என்ற எண்ணம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக, அந்த 7 இந்தியர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.