பூமி நோக்கி மிகப்பெரிய ஆபத்து வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அது என்ன ஆபத்து என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா? இல்லையா?. நம்பலாமா? நம்பக் கூடாதா? என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்ற வருகின்றன.
ஆனால், ஏலியன்கள் உள்ளதாகவோ, அவர்கள் பூமிக்கு வந்ததாகவோ இதுவரை வரலாறு இல்லை. ஆனால், அந்த வரலாறு இந்தாண்டு மாற்றி எழுதப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏலியன்கள் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தக் கூட திட்டமிட்டுள்ளதாகவும் கூறி, அவர்கள் பரபரப்பைக் கூட்டியுள்ளனர். இது தொடர்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான்இயற்பியலாளர் அவி லோயப் உள்ளிட்ட 3 பேர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், பூமியை நோக்கி விண்கலம் ஒன்று அசுர வேகத்தில் வந்துகொண்டு இருப்பதாகவும், இது சர்வ நிச்சயமாக ஏலியன்கள் அனுப்பிய விண்கலம்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஐ அட்லஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், 24 கிலோ மீட்டர் பரபரப்பளவு கொண்டுள்ளதாகவும், சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் வரை, பூமியில் இருந்தபடி தொலைநோக்கி வழியாக விண்கலத்தைப் பார்க்கலாம் என தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், நவம்பர் இறுதியில் அந்த விண்கலம் சூரியனை நெருங்கும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கலத்தின் மூலம் வேற்றுகிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர்.
ஆனால், இவை அனைத்துமே அதீத கற்பனை என விஞ்ஞானிகளின் மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்து வருகிறது. பூமியை நோக்கி வரும் இந்த வான்பொருள் வால் நட்சத்திரமாக இருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இப்போதைக்கு எதுவும் முடிவாகவில்லை. அந்த வான்பொருள், வெறும் வால்நட்சத்திரம்தானா, அல்லது உண்மையிலேயே ஏலியன்களின் விண்கலமா என விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
2025ம் ஆண்டு ஏலியன்கள் மனிதர்களை தொடர்பு கொள்வார்கள் என, பாபா வாங்கா ஏற்கனவே ஆருடம் தெரிவித்திருந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் தற்போதைய அறிக்கை, அந்த ஆருடத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வேற்றுகிரகவாசிகள் எப்படி இருப்பார்கள், வந்தால் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஏலியன்கள் பூமிக்கு வந்தால், முதல் வேலையாக அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்பதுதான், இதுவரை எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் மூலம் நாம் அறிய வரும் செய்தி. அதன்படி பார்த்தால், இந்தாண்டு ஏலியான்கள் வந்தாலும், அவர்களின் முதல் குறி அமெரிக்காவாகத்தான் இருக்கும் எனவும், ஆகவே இந்தியர்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும் நெட்டிசன்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.