நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதித்ததால் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வர உள்ளது.
நெல்லை கேடிசி நகரில் ஐடி நிறுவன ஊழியரான கவின் என்ற இளைஞர் கடந்த 27 ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரது பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதால் கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், போலீசாரின் தூண்டுதலின் பேரில் சுபாஷினி வீடியோ வெளியிட்டதாக கூறி, உடலை வாங்க கவினின் உறவினர்கள் மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நடந்த தொடர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கவினின் உடலை பெற்று கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.