செம்பட்டி அருகே கூலித்தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையன்கோட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளியான வைத்தியலிங்கம் என்பவரிடம் தனியார் நிதி நிறுனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்கள் வீடு அடமான கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். வைத்தியலிங்கத்திடம் வீட்டுமனை பத்திரம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், எழுதப்படாத காசோலையை பெற்று 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளனர்.
பின்னர், வைத்தியலிங்கத்திடம் இருந்து பெற்ற எழுதப்படாத காசோலை மூலம் பணத்தை எடுத்ததுடன் அவருக்கு தெரியாமலேயே அடமான கடன் தொகைக்கான தவணையாக மாதந்தோறும் 8 ஆயிரத்து 600 ரூபாய் கட்டி வந்தனர். கடந்த 3 மாதங்களாக பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வைத்தியலிங்கத்திடம் மாத தவணைத் தொகையை செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியலிங்கம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கூலித்தொழிலாளி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கூலித்தொழிலாளியின் வீட்டு பத்திரத்தை பெற்றுத்தரும்படி காவல் ஆய்வாளரிடம் வலியுறுத்தினர்.