வாங்கிய கடனை அடைப்பதற்காக கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை நடைபெற்ற விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஆனந்தன் தலைமறைவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிபாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கிட்னியை விற்பனை செய்த விசைத்தறி தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், வறுமை காரணமாகவும், கடனை திருப்பி செலுத்துவதற்காகவும் தங்கள் கிட்னியை 20 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக வேதனை தெரிவித்தனர்.
கிட்னியை விற்பனை செய்ததால் தங்களால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை என்றும், சாதாரண நோய்க்கு சிகிச்சைக்கு சென்றாலும் ஒரு கிட்னியை அறுவை சிகிச்சை செய்துவிட்டதால் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் மறுப்பதாகவும் கூறினர்.
எனவே, தங்களுக்கு தேவையான நிதி உதவியை அரசு செய்து தருவதோடு, மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.