தேனாம்பேட்டை அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊபர் இருசக்கர வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியில் வசிக்கும் 24 வயதுடைய இளம்பெண், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 20 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதற்காக ஊபர் மூலமாக இருசக்கர வாகனம் ஒன்றை முன்பதிவு செய்திருந்தார்.
அதன்படி, அந்த இருசக்கர வாகன ஓட்டுநர் பெண்ணை தினமும் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு ஏற்றிச் செல்ல ஆரம்பித்துள்ளார்.
தொடர்ந்து, தானே தினமும் வந்து விடுகிறேன் எனக்கூறி பெண்ணுடன் பரிச்சயமாகியுள்ளார். வழக்கம்போல் வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்குச் செல்லும்போது, ஜெமினி பாலம் அருகே இளம்பெண்ணிடம் ஓட்டுநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகன ஓட்டுநரான சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.