கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடிகள் காவல் அதிகாரிக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் ராபர்ட் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நெப்போலியன், லோகு உள்ளிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் புழல் சிறைக்கு காவல் வாகனத்தில் போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது, ஒரு காவல் அதிகாரியைக் கொலைக் குற்றவாளிகளில் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகப் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளைச் சிறைக்கு அழைத்து வந்த போலீசாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.