கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும், தயாரிக்கவும், செயற்கை நுண்ணறிவைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவும் இந்திய ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடற்படையை மேலும் பலப்படுத்தும் வகையில், ப்ராஜெக்ட்-18 என்ற பெயரில், NGD எனப்படும் NEXT LEVEL DESTROYERS வகையை சேர்ந்த போர் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் ஆயுதம் தாங்கிய போர் கப்பல்களில், இந்த வகை கப்பல்கள் முதன்மை இடம் வகிக்கின்றன. அண்மையில் “கப்பல் கட்டுமானத்தின் மூலம் தேசத்தைக் கட்டமைத்தல்” என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது, இந்த கப்பல் குறித்த சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள போர் கப்பல்களை காட்டிலும், ப்ராஜெக்ட்-18 கப்பல் அதிநவீனமானது என்பதால், இது சர்வதேச தரத்தின்படி க்ரூஸர் பிரிவை சேர்ந்த கப்பலாக கருதப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிநவீன சென்சார் அமைப்பைக் கொண்டுள்ள இக்கப்பலில், நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடார்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ரேடார்கள் LRMFR என அழைக்கப்படுகின்றன.
360 டிகிரியையும் நுட்பமாகக் கண்காணிக்கும் வகையிலும், 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகக் குறி வைக்கும் வகையிலும் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கப்பல் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் இக்கப்பலால் சுமந்து செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.
குறிப்பாக இவை ஒரே நேரத்தில் 144 ஏவுகணை கலங்களை கொண்டுள்ளன. மேலும், பிரம்மோஸ்-2 போன்ற எதிர்கால ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த கப்பலில் இருந்தபடி தாக்கி அழிக்க முடியும் எனவும், பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலில் இருந்து எளிதாகத் தற்காத்துக் கொள்ளும் வகையில் கவச அமைப்பை இது கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களைக் கையாளும் வசதி கொண்டுள்ள இக்கப்பலால், நீருக்கடியில் ட்ரோன்களை ஏவவும், நீருக்குடியிலான தாக்குதல்களை எதிர்கொள்ளவும் முடியும். மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின்கீழ், இந்த கப்பலின் 75 சதவீத கட்டுமான பணிகள் உள்நாட்டிலேயே நடைபெறுகின்றன.
இத்தகைய அதி சக்தி வாய்ந்த போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்களின் வருகையில் வல்லரசு நாடுகளுக்கு இணையான ராணுவ வலிமையைப் பெற்று வருகிறது இந்திய ராணுவம்.