திருப்பூர் அருகே வனச்சரக அலுவலக கழிவறையில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது சம்பவ இடத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உடுமலைப்பேட்டையை அடுத்த குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கடந்த 2022-ம் ஆண்டு மாரிமுத்து உட்பட 6 பேர் மீது கஞ்சா செடி வளர்த்ததாக வனத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்ற 5 பேர், வனத்துறை விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். ஆனால் மாரிமுத்து மட்டும் விசாரணைக்கு ஆஜராகாமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்ததால், அவர் மீது வனத்துறையினர் ஆத்திரத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மாரிமுத்து உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கறிஞரைச் சந்தித்துவிட்டுச் சென்ற மாரிமுத்துவை சிறுத்தைப் பல் வைத்திருந்ததாகக் கேரள வனத்துறையினர் கைது செய்து, தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.