இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில், முதன் முதலில், மேலோட்டமான எல்லைக்கோடு ((Lord Wavell)) வேவல் பிரபு என்பவரால் வரையறை செய்யப்பட்டது. அதன்பிறகு, இந்துக்களும், சீக்கியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் இந்தியாவில் இருக்கும் வகையிலும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் பாகிஸ்தானில் இருக்கும் வகையிலும் எல்லைக்கோடு பிரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1947 ஆகஸ்ட் 3 ஆம் தேதி, காஷ்மீர் மகாராஜாவை, காந்தி சந்திக்க வேண்டிய நாள். தேசப் பிரிவினை மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் காந்தியைச் சந்திக்க விரும்பாத போதும், ஸ்ரீநகருக்கு வந்துவிட்டாரே என்ற காரணத்தால் மரியாதைக்காக சந்திக்க ஒப்புக் கொண்டிருந்தார்.
மகாராஜாவின் குலாப் பவன் அரண்மனையில் நடந்த இந்த சந்திப்பில் காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் என்று எந்த கோரிக்கையையும் காந்தி வைக்கவில்லை. அதைப் பேசாமல் மகாராஜாவிடம் காந்தி என்னதான் பேசினார் என்பது அடுத்த ஏழு நாளில் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி, தமது நம்பிக்கைக்குரிய திவான் ராமச்சந்திர கக்-கை மகாராஜா பதவிநீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஷேக் அப்துல்லாவும் செப்டம்பர் மாதம் விடுதலை செய்யப் பட்டார்.
தனக்கு எதிராகச் செயல்பட்ட திவானைப் பழிவாங்கவும், தேசத் துரோக வழக்கில் சிறைசென்ற தனது நண்பர் ஷேக் அப்துல்லாவுக்கு விடுதலை வாங்கித் தரவுமே காந்தியை, காஷ்மீருக்கு நேரு அனுப்பினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
முன்னதாக, 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-பாகிஸ்தான் நிலப்பரப்பில் எல்லைக் கோட்டினை நுணுக்கமாக வரையும் பொறுப்பினை சிரில் ராட்கிளிஃப் என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு கொடுத்திருந்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
சுமார் 34 கோடி மக்கள் வாழும் 4,50,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை இரண்டாகப் பிரித்து, இருநாடுகளின் எல்லையினை முடிவு செய்வதற்கு வெறும் 5 வாரக் கால அவகாசமே சிரில் ராட்கிளிஃப்பு-க்கு இருந்தது.
கிட்டத்தட்ட ஒரே தேசத்தை இரண்டாகப் பிளக்கும், தேசப் பிரிவினைக்கான வரைபடம், கடைசிக் கட்டத்தை எட்டி இருந்தது. இந்நிலையில், அன்று மாலை 4 மணியளவில், டெல்லியில், நேருவின் இல்லத்திலிருந்து ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க அதில், 12 பேர் இடம்பெற்ற தனது அமைச்சரவை பட்டியலைச் சுதந்திர இந்தியாவுக்கு நேரு அறிமுகம் செய்திருந்தார்.
இதே நேரம், மகாராஷ்டிராவில் புதிய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. காஷ்மீரில், கணவர் சிறையிலிருந்த நிலையிலும், ஷேக் அப்துல்லாவின் மனைவி பேகம் அக்பர் ஜஹான் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் காந்தி கலந்து கொண்டார். தேசப் பிரிவினை மற்றும் நாட்டில் நடக்கும் மதக்கலவரங்கள் குறித்த எந்தவித வருத்தமும் இல்லாமல், அந்த ஆடம்பர விருந்தில் கடைசி வரை காந்தி இருந்தார்,
ஆகஸ்ட் 3ம் தேதி இரவு, நன்றாக வாழ்ந்த இந்துக் குடும்பங்கள் திடீரென எல்லாம் இழந்து பரதேசியாகி, துண்டாடப்பட்ட இந்தியாவை நோக்கி வந்தவண்ணம் இருந்தனர். உடைமைகளை எல்லாம் இழந்து, உயிர் பயத்துடன் இரவோடு இரவாக இந்தியாவுக்குத் திரும்பிய இந்துக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
விடுதலைக்கு இன்னும் 10 நாட்களே மிச்சம் இருக்கின்ற அடுத்த அடுத்த நாட்களில் என்ன நடந்தது என்பதை இன்னொரு செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.