கத்தியின்றி ரத்தமின்றி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை. சுதந்திரம் கொடுக்க முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசு, பிரிவினை திட்டத்தையும் செயல்படுத்தியது. சுதந்திரத்துக்கு முந்தைய 15 நாட்கள் இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமான நாட்களாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
டெல்லியில் நேருவின் வீடு பரபரப்பாக இருந்தது. ஆட்சி அதிகாரம் கைமாறுவதற்கு இன்னும் 13 நாட்களே இருந்தன. சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும் ? நேரு என்ன உடை அணிய வேண்டும் ? எந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் ? எல்லாம் நேருவின் வீட்டில் விவாதிக்கப் பட்டது.
சமஸ்தானங்களையெல்லாம் இந்தியாவுடன் இணைப்பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு அமைச்சரவையில் இணையுமாறு நேரு அழைப்பு விடுத்தார். அந்நேரத்தில் நாட்டை ஒருங்கிணைப்பதிலும், வன்முறைகளையும் தடுப்பதிலும் படேல் மும்முரமாக இருந்தார்.
பெரிய சமஸ்தானங்களான மைசூர்,பரோடா,குவாலியர்,பிகானீர்,ஜோத்பூர்,ஜெய்ப்பூர் ஆகியவை இந்தியாவுடன் இணையச் சம்மதம் தெரிவித்திருந்தன. போபால், இந்தூர்,மற்றும் ஹைதராதாபாத் இன்னும் முடிவு அறிவிக்காமலிருந்தன.
நாகாலாந்தில் உள்ள நாகா பழங்குடி மக்கள், தங்கள் சுதந்திர தேசமாக இருக்க விரும்புவதாகவும்,தனி அரசு அமைத்துக் கொள்வதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியச் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்றும் அறிவித்தனர்.
சிந்து, பலூசிஸ்தான் மற்றும் வங்காள மாகாணங்களை இணைப்பதில் சிக்கல் அதிகரித்து வந்தது. இந்தியாவின் அரசியல் அமைப்பு சபையின் தலைவராகப் பொறுப்பேற்க இருந்தார் ராஜேந்திர பிரசாத். அவரிடம், சுதந்திர தின விழாவில் ராணுவத்தினரும் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல், இன்றைய உத்தரப்பிரதேசம் அன்றைய ஐக்கிய மாகாணத்திலிருந்த இந்து மகா சபையின் சார்பில் காங்கிரஸ் அரசுக்கு 10 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவை எல்லாம் நிராகரிக்கப்பட்டதோடு, இந்து மகா சபையின் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரம் புனேவில் ஒரு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சாவர்க்கர், நாமெல்லாம் இந்துக்கள் என்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தேசத்தைத் துண்டாடக் காங்கிரஸ் முடிவு செய்தது என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்ததாலேயே அக்கட்சியால் தேசத்தைப் பிளவுபடுத்த முடிந்தது என்று சுட்டிக் காட்டினார்.
ராவல்பிண்டி,பெஷாவர்,சிட்டாகாங்,டாக்கா மற்றும் அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளில், மதக்கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அதேநேரத்தில், காஷ்மீரில் இருந்த காந்தியைச் சந்தித்த ஷேக் அப்துல்லாவின் மனைவி பேகம் அக்பர் ஜகான், தமது கணவரை விடுதலை செய்யக் காஷ்மீர் மன்னரிடம் வற்புறுத்துமாறு காந்தியிடம் கேட்டுக் கொண்டார்.
ஆகஸ்ட் 3ம் தேதி தான் மன்னர், தம் அரண்மனைக்குக் காந்தியை அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.