ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள், இரு நாடுகள் இடையேயான போருக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், ரஷ்யா அதனைச் செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை.
மாறாக, தனது தாக்குதலின் வீரியத்தை அந்நாடு அதிகரித்து வருகிறது. இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்ததுடன், அந்நாட்டுடன் வணிக செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறது.
மேலும், ரஷ்யா இன்னும் 50 நாட்களில் போரைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், ரஷ்யா ஒன்றும் இஸ்ரேலோ, ஈரானோ கிடையாது எனவும், ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை அந்நாட்டின் மீதான போருக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
இந்த பேச்சால் சீண்டப்பட்ட ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி 2 அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்களை அனுப்ப ஆணையிட்டார். இதற்குப் பதிலளித்த ரஷ்யா, அமெரிக்காவைக் காட்டிலும் தங்களிடம் அதிக அணுஆயுத நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளதாகத் தெரிவித்தது.
அத்துடன், ஒலியைப் போன்று 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரஸ் நாட்டில் நிலைநிறுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸ் நாட்டை சுற்றி நேட்டோ பல நாடுகள் உள்ளன. எனவே, அந்த நேட்டோ நாடுகளையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் ஆரெஷ்னிக் ஏவுகணைகளை பெலாரசில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், ராணுவப் பணியில் ஆரெஷ்னிக் ஏவுகணைகள் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதியில் அவை பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் எனவும் கூறினார்.
ஆரெஷ்னிக் ஏவுகணைகள், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாதவை. இதன் காரணமாக அவற்றை உலக நாடுகள் அஞ்சி வருகின்றன. அத்தகைய ஏவுகணைகளை நேட்டோ நாடுகளின் எல்லையில் நிலைநிறுத்துவது தற்போதுள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இத்தகைய போக்கு, உக்ரைன் போர் முடிவுக்கு வருவதைத் தடுப்பதுடன், மற்ற நாடுகளுடன் போர் ஏற்படும் சூழலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா இடையேயான நேரடி போராகவும் இது மாற வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.