2020-ல் மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகமான நிலையில், 2019-ல் மறைந்த அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, 3 வேளாண் சட்டங்களைத் தான் எதிர்த்தபோது தன்னை மிரட்டுவதற்காக அருண் ஜெட்லி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடினால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அருண் ஜெட்லி கூறியதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, 2020 செப்டம்பர் மாதத்தில் வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2019 ஆகஸ்ட் மாதம் அருண் ஜெட்லி மறைந்தார். வேளாண் சட்டங்கள் அறிமுகமாவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே அருண் ஜெட்லி மறைந்த நிலையில், தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி-யின் மகன் ரோகன் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது தந்தை 2019-ல் காலமானதையும், வேளாண் சட்டங்கள் 2020-ல் அறிமுகம் செய்யப்பட்டதையும் ராகுல் காந்திக்கு நினைவூட்ட விரும்புவதாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், தனது தந்தை உறுதியான ஜனநாயகவாதி எனவும் யாரையும் மிரட்டுவது அவரது இயல்பு அல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.