அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் கமல் என்பவர் கடந்த வாரம் 7 நபர்களை தரிசனம் செய்ய தனியாக அழைத்து சென்றுள்ளார். இதனை கண்ட கோயில் இணை ஆணையர் பரணிதரன், எதன் அடிப்படையில் இத்தனை பேரை கோயிலுக்கு அழைத்து வந்தீர்கள் என கேட்டதுடன், அதற்குரிய விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், கோயில் இணை ஆணையர் குறித்து, ஒரு பெண்ணிடம் தற்காலிக ஊழியர் கமல், தரக்குறைவாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், இணை ஆணையரின் நோட்டீசுக்கு இன்னும் விளக்கமளிக்கவில்லை என்றும், சாதி ரீதியாக தன்னை திட்டவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன், தனிப்பட்ட நபர்களை தனியாக அழைத்து வந்து கமல் புரோக்கர் வேலை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து பலமுறை அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் அதே பணியில் ஈடுபட்டதால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் விளக்கமளித்துள்ளார்.