ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தப் போவதாக தான் கேள்விப்பட்டதாக கூறிய ட்ரம்ப், அது ஒரு நல்ல முடிவு எனவும் கூறினார்.
இந்த நிலையில், அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயரும் என அஞ்சப்படுகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரக்கூடும் என எண்ணெய் சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.