ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், மக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரிக் கரையில் மங்கலப்பொருட்கள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார். அம்மா படித்துறைக்கு வந்த புதுமண தம்பதியினர், காவிரி தாயை வணங்கி, புது மஞ்சள் கயிறை, கழுத்தில் கட்டிக் கொண்டனர். மேலும், திருமணமான சுமங்கலிகள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் இளம்பெண்கள் காவிரி தாயை நினைத்து மஞ்சள் கயிறை புதிதாக அணிந்து கொண்டனர்.
இதேபோன்று, மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடிய பெண்கள், கரையில் மங்கலப் பொருட்களை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதியினர், தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரிய சம்பிரதாயத்தை, காவிரி கரையில் மேற்கொண்டனர்.
தஞ்வை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்ப மண்டப படித்துறையில், புதுமண தம்பதிகள் புனித நீராடி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, தங்கள் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பு குறுக்குத் துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் பெண்கள் பல்வேறு பூஜைகளை மேற்கொண்டனர். புதுமண தம்பதியினர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் தாலியை பெருக்கி கட்டி வழிபாடு நடத்தினர்.
கோவை மாவட்டம் பேரூர் நொய்யல் ஆற்றின் படித்துறையில் ஏராளமானோர் புனித நீராடி, பட்டீசுவரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் அடிவார பகுதியில் மக்கள் புனித நீராடினர். புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலையை காவிரியில் விட்டு, புனித நீராடி காவிரி அன்னையை வழிபட்டனர்.