ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து பொய்யானதென, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது நல்லதல்ல என்று கூறியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் சமீபத்தில் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என்ற தகவலை கேள்விப்பட்டதாகவும், இந்தியாவின் முடிவு உண்மையானதா, இல்லையா என்பது தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால் இது ஒரு நல்ல நடவடிக்கை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் மூலம், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ள பெட்ரோலிய அமைச்சகம், இவை நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தங்கள் என்றும், கச்சா எண்ணெய் வாங்குவதை ஒரே இரவில் நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.