திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனிப்படை காவலர்களால் திமுக நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து மருத்துவமனை முன்பு திரண்ட திமுகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுக்காலனி என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் மதுபோதையில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னுச்சாமி என்பவரிடம் காவலர்கள் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க வந்த அவரது மகன்களான ராஜேஷ் கண்ணன் மற்றும் சின்னத்துரையையும், திமுக ஒன்றிய செயலாளரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து தாக்குதல் நடத்திய இரு காவலர்களையும் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் தாக்குதலில் காயமடைந்த காவலர் உட்பட மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே திமுக ஒன்றிய செயலாளர் தாக்கப்பட்டது குறித்து அறிந்த அக்கட்சியினர் மருத்துவமனை முன்பு குவிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.