ஏற்காடு அருகேயுள்ள மலை கிராமத்தில் சாலை வசதி அமைத்துத்தரக் கோரி அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள சொனப்பாடி மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மழைக் காலங்களில் இந்த கிராமம் நாலாப்புறமும் வெள்ளம் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிப்பதால், இங்கு வசிக்கும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாத நிலை உள்ளதால், இப்பகுதி மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கர்ப காலங்களில் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாததால், கர்ப்பிணிப் பெண்களை வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்க வைத்து பிரசவம் பார்க்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு உரிய சாலை வசதி அமைத்து தர அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.