தமிழகத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பீகார் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம் , அரசியல் சாசன சட்டப்படி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இந்தியாவில் எந்த பகுதியில் வசிக்கவும், எங்கு குடியேறவும் உரிமை உண்டு என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு தொகுதியில் வழக்கமாக வசிக்கும் ஒவ்வொருவரும் அந்த தொகுதியின் வாக்காளராக பதிவு ‘செய்யலாம்’ எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர், டெல்லியில் வசித்து வந்தால், டெல்லியின் வாக்காளராக பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், பீகாரை சேர்ந்த ஒருவர், சென்னையில் வசித்து வந்தால், சென்னையின் வாக்காளராக பதிவு செய்யமுடியும் என்றும் கூறியுள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் இதுவரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்காத நிலையில், 6 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது.