உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.
2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% குறைத்து விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு.
அத்தோடு நில்லாது, பயிர்களைத் தற்காலிக கொள்முதல் நிலையங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி மழையில் நனையவிட்டு வீணாக்கி உழவர்களின் உழைப்பை அவமதித்துள்ளது.
இப்படி தொடர்ந்து உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும்.
“நானும் டெல்டாக்காரன் தான்” என்று இனியொரு முறை பெருமிதம் கொள்ளும் முன், டெல்டா விவசாயிகளின் துயரங்களை ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.