திருப்பத்தூரில் 11ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் முகிலன் திருப்பத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் திடீரென மாயமானதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில் காவல்நிலையத்தில் புகாரளித்து மாணவனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இதற்கிடையே பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதனையறிந்து அங்குச் சென்ற போலீசார் முகிலனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகப் பள்ளியின் ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்காகப் பள்ளி ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.