ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.
ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து கூறி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நடந்த ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் உமர் அப்துல்லா முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை உமர் அப்துல்லாவும் வலியுறுத்தி வந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரே நாளில் குடியரசுத் தலைவருடன் இருவரும் பேச்சுவார்த்ததை நடத்தியதால் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.