சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், பங்கேற்க, சேலத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல்துறை அதிகாரிகள் நேரில் வழங்கினர்.
சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த 31 வயதான வினோத்குமார் என்பவர் சூரிய சக்தியால் கிடைக்கும் மின்னாற்றலை லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கும் தொழிலைச் செய்து வருகிறார்.
வளர்ந்து வரும் தொழில் முனைவோரான வினோத்குமாரை ஊக்கப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல்துறை அதிகாரிகள் வினோத்குமாரிடம் நேரில் வழங்கினர்.
இதன் பின் பேட்டியளித்த வினோத்குமார், மேக் இன் இந்தியா திட்டம் தன்னை போன்ற இளைஞர்களுக்கு பெரியதொரு தொழில் வாய்ப்பினை உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த வாய்ப்பின் மூலம் தன்னுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பயன்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்தார்.