இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதால் இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் உடனான மோதல் வெடித்த பிறகு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா ஊக்கப்படுத்திய தாவும், தற்போது, அந்த நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றியிருப்பது நியாயமற்றது எனவும் சாடியுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களைத் தனிமைப்படுத்தும் ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டை போலவே, இந்தியாவும் தனது தேசிய நலன்களையும், பொருளாதாரத்தையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.